வடமாகாணத்தில் காணப்படும் 6000 தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

453


6000 தொழிலாளர் வெற்றிடங்களை..



வடமாகாணத்தில் காணப்படும் 6000 தொழிலாளர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மற்றும் புதிய அரச பொது ஊழியர் சங்கம் என்பன கூட்டாக கோரிக்கை முன்வைத்துள்ளன.



அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மற்றும் புதிய அரச பொது ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் ஆகியோருக்குமான சந்திப்பு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்ற இடம்பெற்றது.




இதன்போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது. இதன்போது பொது ஊழியர் சங்க பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது,


வடமாகாணத்தில் 6000 தொழிலாளர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வவுனியா நகரசபையை விரைவாக மாநகர சபையாக தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வவுனியா நகரசபையில் உள்ள 11 தொழிலாளர்கள் வெற்றிடங்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனை வழங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


அத்துடன் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தனியான பிரதேச சபை ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது ஊழியர் சங்க பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் கலந்துரையாடி உரிய தீர்வை விரைவில் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் லோகநாதன், புதிய அரச பொது ஊழியர் சங்க தலைவர் செல்வேந்திரன் மற்றும் பொது ஊழியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.