அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுப்பு முகாமில் கலவரம் : ஒருவர் பலி!!

628

Ausபப்புவா நியூகினியாவில் இருக்கும் அவுஸ்திரேலியக் குடிவரவுத் தடுப்புக் காவல் முகாம் ஒன்றில் இரண்டாவது இரவாக நடந்த கலவரங்களில் சிக்கி புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் கொல்லபட்டார்.

தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். இந்த கலவரத்தில் மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 39 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

மானுஸ் தீவில் அமைந்திருக்கும் இந்தத் தடுப்புக் காவல் மையத்திலிருந்து பல புகலிடக்கோரிக்கையாளர்கள் தப்பித்துள்ளனர் என்று ஞாயிற்றுக்கிழமை வந்த தகவல்களைத் தொடர்ந்து இந்தக் கலவரங்கள் வெடித்தன.

இந்த மரணத்தை ஒரு துன்பகரமான சம்பவம் என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மரிசன் வர்ணித்துள்ளார்.

ஆனால் அவுஸ்திரேலியாவில் குடியேற முயல்வோர்களை இது போன்ற வெளிநாட்டுத் தீவுகளில் அமைந்திருக்கும் முகாம்களில் தடுத்து வைத்து, அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் அவுஸ்திரேலியாவின் தற்போதைய கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

அகதிகள் உரிமைகளுக்காகச் செயல்படும் தன்னார்வக் குழுக்கள் இந்த மானுஸ் தீவில் இருக்கும் தடுப்புக்காவல் மையம் மூடப்படவேண்டும் என்று கோரியுள்ளன.

மானுஸ் தீவில் உள்ள இந்த தடுப்பு முகாமில் இலங்கையர்கள் உள்ளிட்ட 1300 புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.