3 பேர் தூக்கு தண்டனை ரத்து மனித நேயத்துக்கு கிடைத்த வெற்றி : சீமான்!!

493

Seemanநாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..

ராஜீவ் கொலையாளிகள் 3 பேருடைய தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. இது 22 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நீதியரசர் சதாசிவம் இந்த தீர்ப்பு மூலம் தமிழர்களை காப்பாற்றி நீதியை நிலைநாட்டி உள்ளார்.

தமிழ் பற்றாளர்கள், ஆர்வலர்கள், சட்டக் கல்லூரி மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, மனித நேயத்துக்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி.

தமிழர்கள் சிறைச் சாலைகளில் வாடும் 3 பேரையும் விடுதலை செய்யக்கூடிய அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை. 2014ம் ஆண்டு புதுவை–தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.

தமிழர்கள் தமிழர்களுக்கான ஆதரவான அரசு மத்தியில் அமைய போவது இல்லை. தமிழர் ஒருவர் பிரதமரானாலே தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியும். அந்த அடிப்படையில் தமிழக முதல்–அமைச்சர் பிரதமராவதை வரவேற்றோம்.

மாநில கட்சிகள் தேசிய கட்சிகள் போன்றும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகளாகவும் செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும், பாரதீய ஜனதாவும் தமிழகத்துக்கு தண்ணீர் தரவில்லை. அண்டை நாட்டில் இன ஒழிப்பு நடந்தபோது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கியது.

தமிழர் நலனில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 2 கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. அதேபோல் மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கும் அக்கறை இல்லை. ஏதாவது இலவசங்கள் வழங்கி மக்களிடம் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் தான் அரசியல் கட்சியினர் குறியாக உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் இடமும், பணமும் தரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவே சில கட்சிகள் அலைகிறது. இதனை அந்த கட்சியை ஆதரிப்பவர்களும், அந்த கட்சியின் தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.