வவுனியாவில் வியாழேந்திரன் : ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் நிச்சயம் தீர்க்கப்படும்!!

679


நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சனைகளும் நிச்சயம் தீர்க்கப்படும் என்று தபால்சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.



வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று(03.10) விஜயம் செய்த அவர் வன்னிமாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஊடகவியாலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் தேவைகளையும் முன்வைத்திருக்கிறீர்கள். பொதுவாக இங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்து ஊடகவியலாளர்களின் பொதுவான தேவைகளாகவும், பிரச்சனைகளாகவும் இருக்கின்றது.



நாட்டில் உள்ள ஒவ்வொரு துறைகளையையும் வினைத்திறன் மிக்க சேவைத்துறைகளாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்கமைய ஜனாதிபதி, பிரதமரால், அமைச்சுக்கள், ராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டு அவர்களிற்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வேகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.




அந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கரிசனையுடன் இருக்கிறார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன். ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல வேகமாக செயற்படக்கூடியவர்.

கடந்த போ ர் காலத்தின் போது வடகிழக்கு ஊடகவியலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகள்,மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ளார்கள்.


அதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்களிற்கான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம்.

அத்துடன் முழுநேர ஊடகவியலாளர்களாக பணியாற்றும் பலருக்கு இருப்பதற்கு வீடுகள் இல்லை. கொடுப்பனவு போதாமையாக இருக்கிறது,காணிகள் இல்லை.

வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கிறது. பலர் கையடக்க தொலைபேசிகளிலேயே செய்தியை சேகரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். சரியான தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அவை தீர்க்கப்படவேண்டும்.

அந்தவகையில் ஊடகவியலாளர்களின் வசதி கருதி ஊடககல்வி தொடர்பான திட்டங்களும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.


அவர்களிற்கான கல்வி, தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கான பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான திட்டங்களை நாம் வகுத்துக்கொண்டிருக்கிறோம்.

அத்துடன் காணி வீட்டுத்திட்டம் வழங்கும் போது முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு அதனை வழங்குமாறு அரசாங்க அதிபர்களிடமும், பிரதேச செயலாளர்களிடமும் தெரிவிக்கவுள்ளோம்.

அந்தவகையில் எம்மிடம் விடுக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.