வவுனியா செட்டிகுளம் பிரிவில் 105 சிறுவர்கள் பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலையில்!!

594


வவுனியா, செட்டிகுளம் பிரிவில் 105 சிறுவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலை காணப்படுவதாகவும், அதனை துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செட்டிகுளம் பிரதேச செயலக பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.



சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

குடும்ப பிரிவு, தந்தை இல்லாமை, தாய் இல்லாமை, வேறு திருமணம் முடித்தமை மற்றும் திருமணப் பதிவு இல்லாமை போன்ற காரணங்களினாலும், பெற்றோர், பாதுகாவலரின் அக்கறையின்மையாலும்,



செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 105 சிறுவர்கள் பிறப்பு சான்றிதழ் இன்றி இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.



குறித்த சிறுவர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் பிரதேச செயலக பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளரை தொடர்பு கொண்டால் அதனை துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தற்போது 65 பேருக்கு இது தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக தெரியப்படுத்தியுள்ள நிலையில் 15 பேர் பிறப்பு சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

பிரதேச செயலகம் மற்றும் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து ஏனையவர்களுக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.