வவுனியா உட்பட ஐந்து மாவட்டங்களில் கால்நடைகள் அறுக்கத் தடை!!

721

Cowஇலங்கையில் வவுனியா உட்பட ஐந்து மாவட்டங்களில் கால் நடைகளுக்கு கால்-வாய் நோய் (கோமாரி நோய்) பரவியிருப்பதனால், இந்த மாவட்டங்களில் கால்நடைகளை அறுப்பதையும் விற்பனை செய்வதையும் அரசாங்கம் தடை செய்துள்ளது.

கால்நடைகளை குறிப்பாக ஆடு மாடுகளை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களையும் கால்-வாய் நோய் பரவியுள்ள மாவட்டங்களாக விசேட கெசட் அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்த உள்ளதாக அரசாங்க உயரதிகாரி தெரிவித்தார்.

கால்நடைகளை ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வாகனங்களில் ஏற்றிச் செல்வதையும் கால்நடைகள் அறுக்கப்படுவதையும் மட்டுப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நோய் மேலும் தொற்று பரவாதிருக்க வேண்டும் என்பதே தங்களுடைய எதிர்ப்பார்ப்பு என்றும் கால்நடைகளை வாகனங்களில் எற்றிச் செல்வதைத் தடுப்பதற்கு பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் டாக்டர் ரட்நாயக்க தெரிவித்தார்.

காற்றின் மூலமாக இந்த நோய் பரவத் தொடங்கியதால் அதனை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் டாக்டர் தபோதினி தேவநேசன் கூறினார்.