வவுனியாவில் வர்த்தக நிலையங்களுக்கும் பொதுமக்களுக்கும் பொலிஸாரின் அவசர அறிவித்தல்!!

3895

பொலிஸாரின் அவசர அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு பொலிஸார் ஒலிவாங்கி மூலம் விசேட அறிவித்தலை விடுத்திருந்தனர்.

மக்கள் கட்டாய தேவை ஏற்பட்டால் மாத்திரம் வெளியே வருவதுடன் குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் நகருக்குள் உள்பிரவேசிப்பது ஆரோக்கியமானது, மேலும் நகருக்குள் உட்பிரவேசிக்கும் சமயத்தில் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும், வர்த்தக நிலையங்களில் பணிபுரிகின்ற ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வியாபாரத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் கை கழுவ அனைத்து வசதிகளையும் வியாபார முகவர்கள் செய்திருத்தல் வேண்டும் என்பதுடன் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினையும் பின்பற்ற வேண்டும்.

இவற்றை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்பதுடன் முகக்கவசம், சமூக இடைவெளியினை பேணாத பொதுமக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் ஒலிவாங்கி மூலம் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

மேலும் ஒலிவாங்கி மூலம் பொலிஸார் அறிவித்தல் விடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் வீதியில் முகக்கவசமின்றி பயணித்த பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் சேகரித்தனர்.

குறித்த நடவடிக்கை வவுனியா நகர், பஜார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.