வெளிநாடுகளில் கொரோனா காரணமாக மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு!!

701

இலங்கையர்கள்..

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வரும் நிலைமையில், அந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியின் மிலான் நகரில் வசித்து வந்த ஒருவரும், இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வந்த இரண்டு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மிலான் நகரில் உயிரிழந்த நபர் குருணாகல் பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவர். சில வருடங்களாக அவர் தனது குடும்பத்தினருடன் இத்தாலியில் வசித்து வந்துள்ளார். 56 வயதான ஸ்ரீலால் ஹேரத் என்ற இந்த நபர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலான் நகரில் உயிரிழந்த இந்த இலங்கையரின் குடும்பத்தினர் அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மிலான் நகர சபை தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இறந்தவரின் இறுதி கிரியைகளை மேற்கொண்டுள்ளது.

லண்டனில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்கள் நீண்டகாலமாக அங்கு வசித்து வந்துள்ளனர். இந்த பெண்களில் ஒருவரின் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அவர் லண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இத்தாலியின் மிலான் நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் பல இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்து வருவதாகவும் அவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாக மிலான் நகரில் உள்ள இலங்கை தூதரகப் பிரதிநிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக நேற்றைய தினம் முதல் நாட்டை முற்றாக முடக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா முதலாவது அலையில் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 30க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதற்கு முன்னர் உயிரிழந்துள்ளனர்.