வவுனியாவில் வறட்சியினால் பல கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு : 492 குடும்பங்கள் பாதிப்பு!!

1083


வவுனியாவில் வறட்சி..



வவுனியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்த வறட்சியான காலநிலை காரணமாக பல கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், 492 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



வவுனியாவில் யூன் மாதத்தில் இருந்து கடும் வறட்சி நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் வழமையாக ஒக்டோபர் மாதத்தில் மழை கிடைக்கும். ஆனால் இம்முறை ஒக்டோபர் மாதத்திலும் வரட்சி நிலை நீடித்தமையால் குளங்களில் நீர் வற்றியுள்ளதுடன், கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளது.




அந்த வகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒமந்தையில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஊஞ்சல் கட்டியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேரும், மருதோடையில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேரும்,


கற்குளத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும், வெடிவைத்தகல்லில் 420 குடும்பங்களைச் சேர்ந்த 1020 பேரும், சின்னடப்பனில் 20 குடும்பத்தைச் சேர்ந்த 82 பேரும் என 492 குடும்பங்களைச் சேர்ந்த 1471 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கான குடிநீரானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக இதுவரை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 448 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஆச்சிபுரம், தாஸ் நகர், சிறிநகர், அண்ணா நகர், சிறிராமபுரம், மகாறம்பைக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர் வற்றி குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் கிராமங்களுக்கு 13 தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டு அவற்றின் மூலம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஊடாக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், குளத்து நீர்களும் வற்றியமையால் கால்நடைகளும் நீர் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளன.

இவ்வாறு வழங்கப்படுகின்ற நீர் குடிப்பதற்கு மட்டும் போதுமானதாக இருக்கும் நிலையில் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள நீரின்றி பிள்ளைகளுடன் அவலப்படும் நிலை தொடர்கின்றது.

எனவே, காலம் காலமாக வறட்சிக் காலப்பகுதியில் தாகத்தை தீர்ப்பதற்கு கூட கையேந்தும் நிலையில் உள்ள தமது குடிநீர் தேவையைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இம் மக்களின் ஏக்கமாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வவுனியாவில் பரவலாக மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.