வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ – சாள்ஸ் எம்.பி கடும் தர்க்கம்!!

969

வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில்..

மகாவலி எல் வலய விஸ்தரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கூட்டம் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (07.11) இடம்பெற்றது.

இதன்போது மகாவலி எல் வலய அபிவிருத்தி மற்றும் குளப் புனரமைப்பு பற்றி பேசப்பட்ட போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டின் மூலம் தமிழர் கிராமங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதுடன், அவை சிங்கள கிராமங்களாக மாற்றப்படுகின்றன.

இந்த திட்டம் காரணமாக தமிழ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறது. இங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஸ அவர்களுக்கு 13 எம்.பிகள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வழங்கி இது தொடர்பில் பேசியிருக்கின்றோம்.

அவர் இது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். எனவே அதுவரை குறித்த மகாவலி எல் வலய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என இரு தடவைகள் வலியுறுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ, இங்கு வந்து இதை வைத்து அரசியல் செய்யாமல் சொல்வதைக் கேளுங்கள் என சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி மீது கை நீட்டி கடும் தொனியில் பேசியிருந்தார்.

அத்துடன், இந்த அரசாங்கம் எமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பார்காது தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் அரசாங்கம் என்ற வகையில் பணியாற்றுகின்றது.

வடக்கிலும் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வன்னிக்கும் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் உண்மை. இந்த அரசாங்கம் எந்த பராபட்சமும் பார்க்காது இந்த நாடு என்ற அடிப்படையில் செயற்படுகிறது என கூறியிருந்தார்.

இதனையடுத்து சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி அமையாகி இருந்தார். அத்துடன் மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்கள், அகழிகள் மற்றும் குடியிருப்பு, பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்பல குறுக்கிட்டு, அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இவ் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.