வவுனியாவில் நோயாளரின் வீட்டிற்கே மருந்தை வினியோகிக்கும் திட்டம் அறிமுகம்!!

995


வவுனியா வைத்தியசாலையில் பதிவுசெய்துள்ள கிளினிக் நோயாளர்களிற்கான மருந்துகளை அவர்களது வீடுகளிற்கே கொண்டு சென்று வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.நந்தகுமார் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,



தற்போதைய நெருக்கடியான சூழலில் வைத்தியசாலைக்கு வருகைதரும் மக்களின் தொகையை மட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய சுகாதார அமைச்சின் DGHS/COVID 19/347/2020 (III) ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக அரச வைத்தியசாலையில் பதிவுசெய்துள்ள நோயாளர்களுக்கான மருந்து வகைகளை அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக்கில் பதிவு செய்து தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக வந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாத பொது கிளினிக் நோயாளர்கள் 0740104936 என்னும் தொலைபேசி இலக்கத்துடனும்,



பொதுவைத்திய நிபுணர்களிற்கான கிளினிக் நோயாளர்கள் (VP OPD) 0761001936 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை தொடர்புகொண்டு நோயாளரின் பெயர், தற்போதைய வதிவிட முகவரி, கிளினிக் பதிவு இலக்கம், பாவனையிலுள்ள தொலைபேசி இலக்கம், வீட்டிற்கு அருகாமையிலுள்ள தபால் கந்தோரின் விலாசம் ஆகிய தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



இதேவேளை நோயாளர்கள் தங்களின் கிளினிக் தினத்தின், முதல் வாரத்தின் புதன் கிழமைகளில் தங்களுக்குரிய மருந்துகளை பொதி செய்து அஞ்சல் திணைக்களத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக தங்களுடைய விபரங்களை திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மேற்குறித்த தொலைபேசியினூடாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தொலைபேசியூடாக அறியத்தர முடியாதவர்கள், தங்கள் கிராம உத்தியோகத்தர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஊடாக மேற்படி விபரங்களை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வைத்தியரின் ஆலோசனையினை நேரடியாக பெறவேண்டும் என கருதும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வழமைபோன்று சமூகமளித்து வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.