
நாடாளும் மக்கள் கட்சியின் ஆதரவு இன்றி இனி யாரும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று அக்கட்சித் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக், இன்று நாம் விதைத்த விதை 2 மாதத்தில் விருட்சமாகி ஆலமரமாக மாறும்.
தமிழகம் தற்போது இந்தியாவில்தான் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. தமிழன் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறான். இதுவரை நாம் ஏமாற்றப்பட்டோம். இனி ஏமாற்றியவர்கள்தான் ஏமாறவேண்டும்.
இனி நாடாளும் மக்கள் கட்சியின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நான் சென்னை சென்றதும் ஒரு வாரத்தில் நல்ல சேதி வரும். அதன் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்ல காலம் பிறக்கும். அப்போது விழா கொண்டாடுங்கள்.
மேலும் இதுவரை இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றி வந்து இருக்கிறார்கள். மக்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக நான் தேனி தொகுதியில் போட்டியிடுவேன் .இரண்டு தேசிய கட்சிகள் மற்றும் ஒரு மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு வருகிறது.
விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட ஐந்து தொகுதிகளில் எங்களது கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள், எங்கள் கட்சியில் அனைத்து சாதி மக்களும் உறுப்பினராக இருக்கிறார்கள்.
ஈழத்தமிழர் பிரச்னையில் சட்ட ரீதியாக காங்கிரஸ் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காங்கிரஸ் சீனாவுக்கு பயந்து இலங்கையிடம் நட்பாக இருக்கிறார்கள்.பார்வர்டு பிளாக் கட்சியை உசிலம்பட்டி தாண்டி யாருக்கும் தெரியாது இந்த கார்த்திக்தான் அந்த கட்சியை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தவன்.
பார்வர்டு பிளாக் கட்சியினர் இதை என்னுடன் நேருக்கு நேராக மேடை போட்டு பேச தயாரா? இல்லை நானே என் செலவில் மேடை போடுகிறேன் அவர்கள் வந்து விவாதம் செய்ய தயாரா? அவர்கள் என்னை தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிறவன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றும் இந்த தேனி தொகுதியில் கண்டிப்பாக நான் நிற்கிறேன் எனவும் கூறியுள்ளார்.




