தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிப்போருக்கு முக்கிய அறிவித்தல்!

767

தொடர்மாடி குடியிருப்புக்களில்..

கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் சிலர் தொற்றா நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு உட்பட்டவர்களாக இருப்பதினால் நோயாளிகள் தொடர்ந்து அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முவதொர உயன, சிரி-முத்து உயன, சிரி-சந்த செவன, ரன்திய உயன, மெத்-சந்த செவன, மினி-ஜய செவன, ரன்மித் செவன, சத்-ஹிரு செவன, மாளிகாவத்தை ஆகிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு வாழும் குடியிருப்பாளர்களில், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, அதிக கொலஸ்ட்ரோல், சிறுநீரக உபாதைகள், புற்றுநோய் முதலான நாட்பட்ட வியாதிகளுடன் வாழ்பவர்கள் கூடுதல் தொற்று அபாயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இத்தகைய நோயாளிகள் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டும். தாம் நீண்டகாலமாக மருந்து எடுத்து வருவதை தத்தமது வீடமைப்புத் தொகுதிக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் ஆகியோருக்கு அறிவிப்பது அவசியம். அத்துடன், பெயர் விபரங்களையும், மருந்து வகைகள் பற்றியும் தகவல் அறிவிப்பது கட்டாயமானது.

காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல் களைப்பு, மூச்செடுப்பதில் சிரமம், மார்பு வலி முதலான அறிகுறிகள் இருந்தால், சுகாதார அதிகாரியையோ, பொதுச் சுகாதார பரிசோதகரையோ தொடர்பு கொண்டு அறிவிப்பது கட்டாயமானது. தொலைபேசி மூலம் 1999 என்ற இலக்கத்தைத தொடர்பு கொண்டும் உதவியைப் பெறலாம் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.