சென்னையில் ராஜீவ் சிலை உடைப்பு : காங்கிரஸ் – தமிழ் அமைப்பு மோதல்!!

905

Rajeev

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டமும், தமிழர் அமைப்பினர் ஆதரவு போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இரு தரப்பினர் மோதல் மேலும் வலுத்துள்ளது.

தங்களின் எதிர்ப்பை காட்ட சென்னையில் 3 இடங்களில் ராஜிவ் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக ஆதரவு அமைப்பு அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் தமிழ் ஆதரவு அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் புளியந்தோப்பு, வேப்பேரி , புரசைவாக்கம் இடங்களில் இருந்த ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலைகளை இரவில் மர்ம ஆசாமிகள் உடைத்தனர். இந்த தகவல் பரவியதும் இன்று காலையில் காங்கிரசார் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர்.

சிலை உடைக்கப்பட்ட இடத்தில் திரண்டிருந்த வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ, மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பொலிசார் கைது செய்தனர். உடைக்கப்பட்ட 3 இடங்களிலும் ராஜீவ் காந்தியின் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று வட சென்னை மாவட்ட காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த தாக்குதல் தொடர்பாக மாநில காங், தலைவர் ஞானதேசிகன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். இவர் கூறுகையில்,

இலங்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு நியாயமான விசாரணை வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இலங்கை தீர்மானம் தொடர்பாக பிரதமரை சந்தித்து நாங்கள் தமிழ் மக்களின் நிலையை எடுத்து கூறினோம். இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தது.

ராஜீவ் கொலையாளிகள் 4 பேர் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தண்டனை குறைப்பது எப்படி நியாயமாகும் என்று தான் காங்கிரஸ் கேட்கிறது. நீதிமன்ற மாட்சிமைக்குட்பட்டு அனைவரும் இயங்குகிறோம். சாதகமான தீர்ப்பு வந்தால் ஏற்போம், இல்லையென்றால் நாங்கள் தாக்குவோம் என்று கூறுவது சரியல்ல.

நேற்றைய வன்முறையில் ஏற்கனவே பல கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இது போன்ற பயங்கரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று கோருவேன். தமிழக அரசுக்கு இந்த உரிமை உண்டு.

அரசியல் இயக்கம் என்பது லட்சியங்களை முன்னிறுத்தி தான் இருக்க வேண்டும். புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் இயக்கத்தை செயல்பட அனுமதிக்க கூடாது. இவ்வாறு அனுமதித்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை வரும்.

இது அரசுக்கு நல்லதல்ல. கட்சி அலுவலகம் மீது தாக்குதலை பொலிசார் தடுத்து நிறுத்த வேண்டும். கட்சி என்ற பெயரில் வேறு, பல காரியங்களை செய்து வரும் இந்த அமைப்புகளை தடை செய்ய ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த பொலிசார் அனுமதிக்க கூடாது. இவ்வாறு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.