முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இருட்டுமடு பகுதியில் தனது குழந்தைக்காக ஏணை கட்ட முற்பட்ட குடும்பஸ்தர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இருட்டு மடுவினை சேர்ந்த இராமசாமி மோகன்றாச் (36 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றுமுன் தினம் ஏணை கட்ட முற்பட்ட நிலையில் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

குழந்தை பிறந்து பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் ஏணை கட்ட ஏறியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமையானது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





