ஹட்டன் நகரில் மண்சரிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

382

ஹட்டன் நகரின் பௌத்த விஹாரைக்கு அருகில் உள்ள பாதையோரத்தில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவினால் ஹட்டன் நகரிலிருந்து நீதிமன்ற வளாகம், ஸ்ரீபாத சிங்கள ஆரம்ப பாடசாலை, பொன்னநகர், கல்விப் பணிமனை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பாதையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை சீர்செய்வதற்கு ஹட்டன் – டிக்கோயா நகரசபை இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் பத்தனை – திம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போஹாவத்தை மேற்பிரிவு தோட்டத்தில் 6ஆம் இலக்க தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள வெடிப்புக் காரணமாக இந்தக் குடியிருப்பினைச் சேர்ந்த 14 குடும்பங்கள் பாதுகாப்பான இடமொன்றுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

மலையகத்தில் பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழக்கைப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது.

பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்குத் தயக்கம் காட்டுவதோடு தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதிலும் ஆர்வமின்றியுள்ளனர்.

மேலும் தொடர் மழையினால் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்தின் வளர்ச்சியும் குன்றியுள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழையினால் விவசாய நிலங்கள், பயிர்ச்செய்கைகள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகளும் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் காய்கறிகளின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர்.

Nuwaraeliya-Scholl