முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனை குறைப்புக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல்!!

335

High courtராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையைக் குறைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பானது சட்டரீதியாக சட்டவிரோதமானது. எனவே இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் தெரிவித்துள்ளது.

நேற்று இந்த மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், கருணை மனுவை பரிசீலிக்க ஏற்படும் தாமதத்தைக் காரணம் காட்டி ஒருவருடைய தூக்குத் தண்டனையைக் குறைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருப்பது சட்டப்படி தவறானது என்று மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாஷ், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு மைசூர் தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து 4 பேரும் சுப் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த உயர் நீதிமன்று, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். ஆனால் குடியரசுத் தலைவர் உடனடியாக அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீண்ட நாட்கள் கழித்தே அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.

அதில் அவர்கள், கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதால் தண்டனையை குறைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். வீரப்பன் கூட்டாளிகள் மனு மீது கடந்த ஜனவரி மாதம் 21-ந்திகதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது 4 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தனர்.

இதனால் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் தூக்கில் இருந்து தப்பினார்கள். அவர்களை தொடர்ந்து மேலும் 11 பேரின் தூக்கு தண்டனை குறைக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இந்த உத்தரவு கருதப்பட்டது.

இதை முன் உதாரணமாகக் கொண்டே சமீபத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு இந்த மூன்று பேர் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முடிவெடுத்தது. ஆனால் அதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 6ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், அதில் வீரப்பன் கூட்டாளிகள், ராஜீவ் கொலையாளிகள் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கூடாது. கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதமானதை காரணமாக சுட்டிக்காட்டி முடிவு எடுத்து இருப்பதை மாற்ற வேண்டும். இதைக் காரணம் காட்டி தூக்குத் தண்டனையைக் குறைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சட்டவிரோதமானது.

அதில் தவறுகள் உள்ளன. மேலும் இதுபோன்ற முக்கிய வழக்குகளை அரசியல் சாசன பெஞ்ச்தான் விசாரிக்க வேண்டுமே தவிர சாதாரண பெஞ்ச் விசாரிக்கக் கூடாது. அவர்களுக்கு அதற்கு அதிகாரம் இல்லை. எனவே தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பானது தவறானது, சட்டப்படி சட்டவிரோதமானது.

மேலும் இந்த மதிப்புக்குரிய உச்சநீதிமன்றம் வகுத்த வழிமுறைகளுக்கும் புறம்பானதாக இது இருக்கிறது. இந்த, வழக்கைப் பொறுத்தமட்டில் கருணை மனு தாமதமே தண்டனைக் குறைப்புக்குக் காரணம் என்று நீதிபதிகள் காரணம் தெரிவித்துள்ளனர்.

இந்த வகையில், அரசியல் சட்டம் 21வது பிரிவை குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமானதாக கூறியுள்ளனர். இப்படிப்பட்ட முக்கியமான சட்டப் பிரிவை குற்றவாளிகள் காரணம் காட்டும்போது அதுகுறித்து விசாரிக்கவும், முடிவுக்கு வரவும் நிச்சயம் அரசியல் சாசன பெஞ்ச்சால்தான் முடியும். எனவே இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியிருக்க வேண்டும்.

இதைத்தான் அரசியல் சாசனச் சட்டத்தின் 145வது பிரிவும் வலியுறுத்துகிறது. எனவே தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும், அதற்கான தகுதி இந்த கோரிக்கைக்கு உள்ளது என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை எதிர்த்த மனு விசாரணைக்கு வரும் அதே நாளில் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும்.