வவுனியாவில் விபத்துக்களில் காயமடைபவர்களை உடனடியாக வைத்தியசாலை கொண்டு வாருங்கள் : வைத்தியசாலை அத்தியட்சகர்!!

763

vavuniya

எவரேனும் விபத்தில் சிக்கினால் அங்குள்ளவர்கள் அவர்களை உடன் வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியகலாநிதி அகிலேந்திரன் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விபத்தில் சிக்கியவர்கள் காயமேற்பட்டுள்ள ஒருவரை அவ்விடத்திலேயே விட்டு சென்றால் அது சிலவேளைகளில் உயிரிழப்பாக போய்விடும். எனவே விபத்தில் சிக்கியவர்களை எவரேனும் கண்டால் அவர்கைள உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயலவேண்டும். அதற்கு சாதகமான நிலை ஏற்படாத பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அறிவித்தலை வழங்குங்கள்.

குறிப்பாக வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியையொருவர் ஒரு மணித்தியாலயத்திற்கும் மேலாக விபத்து இடம்பெற்ற இடத்தில் காணப்பட்டுள்ளார். அவரை எவரும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அவ் ஆசிரியை வைத்தியசாலை கொண்டு வந்தவுடன் மரணமடைந்தார். இது துர்ப்பாக்கியமான நிலையாகும். இன்று அவ் ஆசிரியையினுடைய குழந்தையின் எதிர்காலத்தையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது.

எனவே இவ்வாறான சம்பவங்களை இனி வரும் காலத்தில் இல்லாது செய்வதற்கு மக்கள் முன்வரவேண்டும். இந்த வகையில் விபத்தில் எவரேனும் சிக்கினால் அவர்களை உடன் வைத்தியசாலைக்கு கொண்டு வர முயலுங்கள். சிலர் சட்ட சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதனால் விபத்தில் சிக்கியவர்களை அவ்விடத்திலேயே விட்டு செல்கின்றனர்.

அதன் காரணமாக விபத்தில் சிக்கியவர்களை கொண்டு வரும் நபர்களுக்கு நாம் சட்ட சிக்கல்களை குறைப்பதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எனவே இனி வரும் காலங்களில் அவர்களுக்கு சட்டசிக்கல் வராத வகையில் இருக்கும் என்பதனால் விபத்தில் சிக்கியவர்களை உடன் வைத்தியசாலைக்கு கொண்டு வாருங்கள்.

விபத்தில் சிக்கியவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வர முடியாத சூழல் காணப்படுமாயின் வவுனியா பிரதேசமாயின் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார்.