வவுனியா பெரியதம்பனை மக்களின் அவல நிலை : மலசலம் கழிப்பதற்கு கூட இடமில்லை!!(படங்கள்)

333

மீள்குடியேறிய காலம் முதல் மலம் கழிப்பதற்கு கூட இடமின்றி வாழ்ந்து வருவதாக வவுனியா பெரியதம்பனை கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

வவுனியா, பெரியதம்பனை கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (01) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

வவுனியா, பெரியதம்பனை மகாவித்தியாலயத்தின் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இடம்பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பினருக்கும் பெரியதம்பனை, கன்னாதிட்டி, நீலியாமோட்டை, பிரமானங்குளம், தம்பனைக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் அம் மைதானத்திலேயே இச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதி மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தமது கிராமங்கள் தொடுர்பில் தெரிவிக்கையில்,

கடந்த 1977ஆம் ஆண்டு முதல் நாம் இப் பகுதியில் குடியிருக்கின்றோம். அன்று எவ்வாறு குடியேறிய மாதிரி அதே நிலையிலேயே நாம் இன்றும் இருக்கின்றோம். எமக்கான நிரந்தர வீட்டுத் திட்டங்களோ, மலசலகூட வசதிகளோ இன்று வரை வழங்கப்படவில்லை.

இளம் பெண்பிள்ளைகள் கூட பல ஆண்டுகளாக மலசலகூட வசதி இல்லாமையால் காட்டையே பயன்படுத்தி வருகின்றனர். எமது வீடுகள் காட்டுப் பகுதியில் உள்ளமையால் இங்கு யாரும் வருவதில்லை. நாம் கைவிடப்பட்டவர்களாக ஆதிவாசிகள் போன்றே இருந்து வருகின்றோம்.

ஏழு பிரதேசத்திற்கான போக்குவரத்து பாதைகள் சீராக இல்லை. பெரியதம்பனை போன்ற பகுதிகளில் பிரமாளங்குளம் போன்ற பகுதிக்கு 4 கிலோமீற்றர் நடந்து சென்றே போக்குவரத்து வாகனங்களை பெறமுடிகிறது;.

இது தவிர எமது பிரதேசத்தில் குடிநீர் பிரச்சனையும் உள்ளது. நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் ஒன்று உள்ளது. அது தனியார் காணியில் இருக்கிறது. பழுதடைந்த நிலையில் உள்ள இவ் இயந்திரத்தை திருத்தி இங்குள்ள பொதுக் கிணற்றில் வைத்தால் நாம் குடிநீரைப் பெறமுடியும்.

காட்டு யானைகளினால் எமது கூடாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நாம் தினமும் செத்துப் பிழைத்தே வாழந்து வருகின்றோம். விடிந்தால் தான் தெரியும் யார் யார் உயிருடன் இருப்புது என்று. அவ்வாறு தான் ஒவ்வொரு பொழுதும் கழிகின்றன எனவுஅவர்கள் தெரிவித்தனர்.

இப் பிரதேச மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தாம் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு உடன் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தனர்.

இக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (சிவம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6