வவுனியா தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக திரு.எஸ்.என்.ஜி.நாதன் தெரிவு!!

371

வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் புதியநிர்வாகிகள் தெரிவும் வவுனியாவில் உள்ள ஹோட்டல் வன்னி இன்னில் 02.03.2014 ஞாயிறு காலை பத்துமணிக்கு ஆரம்பமாகி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ஜெனானந்தசிவம் தாட்சாயினி மற்றும் கிராமஅலுவலர் திரு.சிவசுந்தரம் சிவானந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

30 நிரந்தர உறுப்பினர்களும் 35 புதிய உறுப்பினர்களுமாக 65பேர் கலந்து கொண்டிருந்தனர். தலைவர் தமிழருவி சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் கடவுள்வணக்கம், தமிழ்வாழ்த்துடன் ஆரம்பமானது. தலைவர் சிவகுமாரன் அவர்கள் தனது தலைமையுரையில் கடந்த பத்துவருடங்களாய இயங்கிவரும் நமது தமிழ்ச்சங்கம் வவுனியா மாவட்டரீதியில் இயங்கி பல தமிழ்வளர்க்கும் நல்ல வேலைத்திட்டங்களை, விழாக்களை, நிகழ்ச்சிகளை நடாத்தி வேரூன்றி ஆலமரமாய் வளர்ந்து நிற்கின்றது.

கடந்த பத்து வருடங்களில் இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இன்று எமது அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என்று இரகரம் கூப்பி வரவேற்கிறோம் என்று கூறினார்.

வவுனியா தமிழ்ச்சங்கம் பதியப்பட வேண்டிய அவசியத்தையும், 2005ம் ஆண்டு மேமாதம் 10ம்திகதி பதிவதற்காய் அன்றைய பிரதேச செயலாளரிடம் விண்ணப்பம் கொடுக்கபட்டது. ஆனால் பதியப்படவில்லை. ஆகவே இப்போது நாம் இச்சங்கத்தை பதிவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றார்.
அடுத்து கடந்த ஆண்டின் வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

16.03.2014இல் வவுனியா தமிழ்ச்சங்கம் அங்குரார்ப்பணம் என்று எமது சங்கத்தின் பெயரில் வீரகேசரியில் 26.02.2014 அன்று வெளிவந்த செய்தியை தலைவர் வாசித்தார். இது தொடர்பான கருத்துக்கள் சபைஉறுப்பினர்களிடம் கேட்கப்பட்டது.
எமது தமிழ்ச்சங்கம் இப்படியே தொடர்ந்து நடைபெற வேண்டும். சங்கத்தில் இணையவிரும்புகின்ற அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு வரவேற்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து எமது சங்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற கருத்தை திரு.எஸ்.என்.ஜி.நாதன் முன்மொழிய திரு.நா.பிரபாகரக்குருக்கள் வழிமொழிந்தர். இதனை சபையினர் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாக தமது கைகளை உயர்த்தி தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரு.ல.சதீஸ்குமார் ‘பத்துவருடமாக தனித்துவமாக இயங்கி வந்தது. அப்போது யாரும் இதுபற்றி யோசிக்கவில்லை. பலவிழாக்களை வெற்றிகரமாக நடாத்தியது. பலகலைஞர்களை கௌரவித்தது, பல கலைஞர்களை உருவாக்கியது. இப்படிப்பட்ட எமது சங்கத்தினை சிதைப்பதற்கு எமது சங்கத்தின் பெயரிலேயே இன்னொரு சங்கம் உருவாக்கப்படுவதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.

இனம், மொழி, மதம் என்ற பேதம் மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சங்கத்தினை மேலும் வளர்க்க வேண்டும் என திரு.எஸ்.கருணாகரன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக இயங்கி வந்த நிர்வாகசபை கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகசபைத் தெரிவை நடாத்துவதற்காக சங்கத்தின் போஷகர் திரு.முத்து ஜெயந்திநாதக்குருக்கள் அவர்கள் தற்காலிகத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

புதிய நிர்வாக சபையில் தலைவராக திரு.எஸ்.என்.ஜி.நாதன் தெரிவுசெய்யப்பட்டார். உபதலைவராக திரு.ஐயம்பிள்ளை, செயலாளராக தமிழருவி திரு.த.சிவகுமாரன், உபசெயலாளராக திரு.கோடீஸ்வரன், பொருளாளராக திரு.சி.உதயகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களுடனான செயற்குழு உறுப்பினர்களாக க.சிவபாலன், ல.சதீஸ்குமார், சி;.கஜேந்திரகுமார், சு.விஜயதாஸ், க.அருந்தவராஜா, வி.முருகேசபிள்ளை ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகசபையினர் தற்காலிக தலைவரால் வரவேற்கப்பட்டு தலைவரிடம் நிர்வாகம் ஒப்படைக்கபட்டது. சபையினர் கரகோசம்செய்து புதியதலைமையை வரவேற்றனர்.
புதிய தலைவரின் தலைமையுரையை தொடர்ந்து, சங்கத்தின் யாப்புவிதிகள் வாசிக்கப்பட்டது.

திரு.வரதகுமார், திரு.விஜிதரன், திரு.எஸ்.என்.ஜி.நாதன், திரு.லோகேஸ்வரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ஜெ.தாடஷாயினி ஆகியோர் தெரிவித்த திருத்தங்கள் மற்றும், புதியசேர்க்கைகள் தொடர்பான கருத்துக்களுடன் இந்த யாப்புவிதியை ஏற்றுக்கொள்வதாக திரு.முத்து ஜெயந்திநாதக் குருக்கள் முன்மொழிய, திரு.திவாகரக்குருக்கள் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது. செயலாளர்.திரு.தமிழருவி சிவகுமாரனின் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

V1 V2