இந்தியாவின் நேரடியான அழுத்தமும் ஜப்பானின் மறைமுகமான அழுத்தமுமே இலங்கை அரசாங்கம் 13
ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை ஒத்திவைத்துள்ளமைக்கு காரணமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எம் மீது சுமத்திய இந்தியா இன்று அதனூடாக வட மாகாண சபை தேர்தலை நடத்தும் வியூகத்தில் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயமானது 13ஐ பாதுகாக்கும் இந்தியாவின் இறுதிக் கட்ட அழுத்தமாகும். அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமான உறவுகள் கொண்டிருப்பதை இந்தியாவும் ஜப்பானும் விரும்பவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் உந்துதலின் கீழ் மேற்கண்ட இரு நாடுகளும் 13 ஐ பாதுகாப்பதற்கான
கடும் அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளன. இலங்கைக்கு அதிகளவில் நிதியுதவிகளை ஜப்பான் வழங்குகின்றன.
இந்த உதவிகளையும் மேலும் அதிகரிக்கவும் ஐ.நா. வில்அமெரிக்கா எமது நாட்டுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையிலிருந்து இலங்கையை பாதுகாப்பதற்கும் ஜப்பான் உறுதியளித்துள்ளது.
அரசாங்கம் இன்று பாரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. இவ்வாறானதோர் நிலையில் ஜப்பானின் மறைமுகமான அழுத்தத்திற்கு அரசாங்கம் இணங்கி போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இந்தியா கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றது.
இங்கு பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடத்தப்படாமல் இருந்திருக்குமானால் வட மாகாண சபை தேர்தலை நடத்தும் நிலைமை உருவாகியிருக்காது. இந்த வியூகத்தையும் இந்தியாவே வகுத்தது. இம்மாநாட்டை இங்கு நடத்தும் பொறியில் இலங்கையை சிக்க வைத்து அதன் மூலம் வட மாகாண சபை தேர்தலை நடத்துவதில் வெற்றி கொண்டுள்ளது.
இம்மாநாடு இங்கு நடத்தப்படாமல் இருந்திருக்குமானால் வடமாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருந்திருக்கலாம்.ஆனால், இன்று அரசாங்கம் இத் தேர்தலை நடத்தும் கட்டாயத்தில் இருக்கின்றது.பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிக்கப்படாது வடக்கில் தேர்தலை நடத்துவது பெரும் ஆபத்தானதாக அமையும் என்றார்.