வவுனியா பொருளாதார மத்திய நிலையம் நாளை முதல் திறப்பு : மொத்த வியாபாரிகளுக்கு மாத்திரம் அனுமதி!!

2603

வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் வர்த்தக நடவடிக்கைக்கும் சுகாதார பிரிவினர் மறு அறிவித்தல் வரை தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் மரக்கறி வியாபாரிகளின் நலனை கருத்து கொண்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியலாய மைதானத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள இடம் ஒதுக்கிட்டு வழங்கப்பட்ட போதிலும்,

தற்போது வவுனியாவில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் இவ்விடத்தினை பயன்படுத்த முடியாத நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் ஆலோசனைக்கமைய வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் அடிப்படையில் 291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா கண்டி வீதியில் அமைக்கப்பட்டு,

பயன்பாடற்ற நிலையில் காணப்படும் பொருளாதார மத்திய நிலையத்தினை தற்காலிகமாக மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே வியாபாரிகள், விவசாயிகள் அனைவரும் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை நாளை காலை முதல் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.