வவுனியாவில் சற்றுமுன் மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

5351

கொரோனா..

வவுனியாவில் இன்று (11.01.2021) இரவு 8 மணியளவில் வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம் மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டாணிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டானிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பகுதி பகுதியாக முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியா நகரில் 54 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அப்பகுதி வர்த்தக நிலைய ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு  நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதன் முடிவுகள் இன்று (11.01.2021) 8 மணியளவில் வெளியானதில் 25 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையுடன் வவுனியா வைத்தியசாலையிலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டானிச்சூர் பகுதியில் 13 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 79 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 7 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 100 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளியான முடிவுகளின் அடிப்படையில் மொத்தமாக 30 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் வவுனியா மாவட்டம் அபாய கட்டத்தில் உள்ளமையை உணர முடிகின்றது.