தமிழக முகாம்களிலிருந்து விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் கியூ பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கியூ பிரிவு போலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த படகு நாகை மாவட்டம் செருகூரை சேர்ந்த மாணிக்கவேல் மகன் செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும் அந்த படகில் 60 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் பின்னர் அவர்களை கடத்தி செல்லும் முயற்சியை கைவிட்டதும் தெரிய வந்தது.
இலங்கை அகதிகளை கடத்தி செல்ல முயன்றதாக மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமில் இருக்கும் உமா ரமணன் என்கிற ரமணன், விழுப்புரம் மாவட்டம் கீழ புதுப்பட்டு முகாமை சேர்ந்த பாபு, மற்றும் நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி முகாதை சேர்ந்த தயா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தரகர்களாக செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும் படகு உரிமையாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். இவர்கள் நாகை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை புழல் சிறைக்கு கொண்டு செல்ல பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ந் திகதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரே விசைப்படகில் தப்பிச்செல்ல முயன்ற 120 பேர் கடற்படையினர் சிக்கியிருந்தனர்.