இந்திய நாடாளுமன்ற தேர்தல் விபரங்கள் அறிவிப்பு : ஏப்ரல் 7ம் திகதி முதல் மே 12ம் திகதி வரை வாக்குப் பதிவுகள்!!

858

Ind Eleஇந்திய நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 7ம் திகதி முதல் மே 12ம் திகதி வரை வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன. மே 16ம் திகதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடப்பு 15வது நாடாளுமன்ற பதவிக் காலம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியை டெல்லியில் தேர்தல் ஆணையர் சம்பத் நேற்று அறிவித்தார்.

தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் ஏப்ரல் 30, மே 7ம் திகதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.

அந்தவகையில் தெலுங்கானாவில் ஏப்ரல் 30ம் திகதியும், சீமாந்திராவில் மே 7ம் திகதியும் தேர்தல் நடக்கிறது. அதே போல ஒடிஸ்ஸாவில் ஏப்ரல் 10ம் திகதியும், 17ம் திகதியும் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் இரண்டு தட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதாவது,

நாடு முழுவதும் மொத்த வாக்காளர்கள் 81.4 கோடி பேர் உள்ளனர். கடந்த தேர்தலைவிட இம்முறை 10 கோடி வாக்காளர்கள் அதிகம். நாடு முழுவதும் 9 இலட்சத்து 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டா பட்டன் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நாடு முழுவதும் 9ம் திகதி சிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முறை புகைப்படம் ஒட்டிய பூத் சிலிப்புகள் வழங்கப்படும். இந்த தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

தேர்தல் அட்டவணை- 9 கட்ட வாக்குப் பதிவு முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7ம் திகதி 2 மாநிலங்களில் 6 தொகுதிகளுக்கு நடைபெறும்.

2வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 9ம் திகதி 5 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெறும். 3வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 10ம் திகதி 14 மாநிலங்களில் 92 தொகுதிகளுக்கு நடைபெறும்.

4வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 12ம் திகதி 3 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும். 5வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17ம் திகதி 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 122 தொகுதிகளுக்கு நடைபெறும்.

6வது கட்ட வாகுப் பதிவு ஏப்ரல் 24ம் திகதி தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நடைபெறும். 7வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 30ம் திகதி 9 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நடைபெறும்.

8வது கட்ட வாக்குப் பதிவு மே 7ம் திகதி 7 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு நடைபெறும். 9வது கட்ட வாக்குப் பதிவு மே 12ம் திகதி 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு நடைபெறும்.

அனைத்து மாநிலங்களிலும் பல கட்டமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மே 16ம் திகதியன்று ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.