
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இங்குள்ள யானைகள் வறட்சி காலங்களில் உணவு, தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக அடிவார பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன.
இரண்டு ஆண்டுக்கு முன்பு செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயில் பகுதிக்கு குட்டியுடன் வந்த தாய் யானை இறந்தது. உடனே யானை கூட்டம் அங்கு முகாமிட்டு பிளிறி கொண்டிருந்தன.
வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டியடித்தனர். ஆனால், குட்டி யானை அப்பகுதியிலே நீண்ட நாட்களாக முகாமிட்டிருந்தது. தாயை புதைத்த இடத்திலே இரவில் தூங்கியது.
இவ்வாறாக நீண்ட நாட்களை கழித்த குட்டி யானை பிறகு ஒரு யானை கூட்டத்தில் ஐக்கியமானது. இந்நிலையில் கடந்த 5 மாதத்துக்கு முன்பு யானை கூட்டத்துடன் இப்பகுதிக்கு வந்த யானை தாய் இறந்த இடத்தில் சென்று படுத்து கொண்டது.
பிறகு அப்பகுதியிலே முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானை காட்டுக்குள் செல்ல மறுத்தது. பிறகு சாக்கு பையில் மிளகாய் பொடி, மூலிகை பொடி கலந்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.
அதனால் யானை ஓடிவிடும் என வனத்துறையினர் நம்பினர். எனினும் இப்பகுதியிலேயே சுற்றி திரிந்ததால் யானைக்கு வனத்துறையினர் செண்பகராமன் என்ற பெயரும் சூட்டினர்.
யானைக்கு பயந்து விவசாயிகள் தோட்ட பகுதிகளுக்கு செல்லவே அஞ்சினர்.
அதனால் விவசாயிகள் குறைவழுத்த மின்வேலி அமைத்து விளை நிலங்களை பாதுகாத்து வந்தனர். நேற்று இரவு யானை மம்சாபுரம் அருகே தனியார் தோட்டத்துக்குள் நுழைய முயன்றது. அங்கு மின்சார கம்பியில் இருந்து மின்வேலிக்கு திருட்டுத்தனமாக இணைப்பு கொடுத்திருந்தனர்.
அதனால் யானை வேலியை தொட்டவுடன் தூக்கி வீசப்பட்டது. யானையின் பிளிறல் சத்தம் செண்பகத்தோப்பு வனப்பகுதி முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்தது. உடனே இரவுக் காவலர்கள், வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர். மம்சாபுரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் யானை முன்கால்களும், தந்தமும் மண்ணில் புதைந்தவாறு இறந்து கிடந்தது.




