அல்லா என்ற வார்த்தையால் மலேசியாவில் தடை செய்யப்பட்ட புத்தகம்!!

256

Allah

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும் மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், புத்தகங்களாகவும் மக்களை அடைந்தன.

இந்தப் பதிப்புகளில் ஒன்றான அல்ட்ராமேன், தி அல்ட்ரா பவர்´என்ற புத்தகத்தில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் அல்லா என்று வருவதால் மலேசியாவில் அந்தப் பதிப்பைத் தடை செய்துள்ளதாக மலேசிய அரசு அதிகாரிகள் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டுத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைத் தன் பொறுப்பில் கொண்ட மலேசிய உள்துறை அமைச்சகம் இந்த வார்த்தைக் குறிப்புகள் பொது ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தினை வலுவிழக்கச் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த புத்தகத்தின் கதாபாத்திரம் பல குழந்தைகளால் போற்றப்படுகின்றது. இந்தக் கதாபாத்திரம் அல்லா என்று அழைக்கப்படுவது முஸ்லிம் இளைஞர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையைக் குலைக்கக்கூடும்.

மேலும், பொறுப்பற்ற இந்த வார்த்தைப் பயன்பாடானது முஸ்லிம் மக்களைத் தூண்டிவிட்டு பொது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் வாழும் நாட்டில் முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற வார்த்தையை உபயோகிப்பதால் அதிகரிக்கும் மத பதட்டங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபையுடன் சமீபத்தில்தான் மலேசிய அரசு ஒரு நீதிமன்ற மோதலில் ஈடுபட நேரிட்டது.

இதனைத் தொடர்ந்தே இந்த வார்த்தைப் பிரயோகம் வரும் புத்தகத்தின் மலேசியப் பதிப்பு மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த கதாபாத்திரத்தைக் கொண்ட மற்ற புத்தகங்கள் தடை செய்யப்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.