வவுனியாவில் சுதந்திரநாள் எமது இனத்திற்கு ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!!

1246

உண்ணாவிரதப் போராட்டம்..

சர்வதேசமே எம் இனத்தை அழிந்த ஸ்ரீலங்கா தேசத்திற்கு இன்று (04.02) சுதந்திர தினம் ஆனால் எமது இனத்திற்கு அது ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (04.02) இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதி கிடைக்காத நிலையில் நாம் எமக்கான நீதியை பெற்றுத் தருமாறு சர்வதேசத்திடம் கோரியே இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றோம்.

காலை 9 மணியில் மாலை 4 மணிவரை கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நாம் எமக்கான நீதியை கோருவதுடன், ஐ.நா மனிதவுரிமை பேரவையில் எமக்கான நீதியைப் பெற சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன், போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.