கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3 ஆயிரம் பேர் பதிவு!!

725

Kachatheevuஇந்தியாவில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3,460 பேர் பதிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமநாதபுரம் மன்னர்களுக்கு சொந்தமாக இருந்து வந்த இந்த தீவில் அப்போது முத்து எடுப்பதற்காகவும், மீன்பிடிப்பதற்காகவும் மீனவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின்பும் இப்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். அப்போது கச்சத்தீவில் தங்கியிருந்து வலைகளை உலர்த்தியும் வந்தனர். சீனிகுப்பன் என்ற மீனவரால் இங்கு அந்தோணியார் கோயில் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவின்போது இந்திய இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் எவ்வித பயண ஆவணங்களும் இன்றி கச்சத்தீவுக்கு சென்று வந்தனர். 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கையிடம் இந்திய அரசு கொடுத்தது.

அப்போது செய்யப்பட்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில் கச்சதீவு திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் சென்று வர தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்தது. இதையடுத்து கச்சத்தீவு திருவிழாவும் தடைபட்டு போனது.

இதன்பின் 2002 ஆம் ஆண்டில் விடுதலைபுலிகளுடன் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ததை தொடர்ந்து கச்சத்தீவு திருவிழா மீண்டும் சில ஆண்டுகள் நடந்தது. அதன்பின் 2009 ஆம் ஆண்டில் புலிகளுடனான போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து கச்சத்தீவு திருவிழா மீண்டும் தடைபட்டது.

இறுதிகட்ட போருக்கு பின் கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவில் மீண்டும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 15, 16 திகதிகளில் நடக்க உள்ளது. இதில், பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து செல்லும் பக்தர்களுக்கான அனுமதியினை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

இதன்படி இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்க 3,460 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இதற்கான அனுமதி பெறுவதற்காக பக்தர்களின் விண்ணப்பங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கச்சத்தீவு செல்வதற்காக 95 விசைப்படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் 500 பேர் கூடுதலாக கச்சதீவு செல்ல விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளிப்பவர்களுக்கு மார்ச் 12, 13 திகதிகளில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு நாட்டுப் படகில் கச்சத்தீவு செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும், விசைப் படகில் செல்லும் பக்தர்களுக்கு மீன் துறையின் சார்பில் உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்படவுள்ளது.

கச்சதீவு திருவிழா முடிந்து ராமேஸ்வரம் திரும்பும் பக்தர்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்க வேர்கோடு புனித ஜோசப் ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மார்ச் 15 ஆம் திகதி காலை 6 மணி முதல் பக்தர்களை ஏற்றி செல்லும் படகுகள் புறப்பட துவங்கும். முன்னதாக படகுகள் மற்றும் பக்தர்களை சுங்கதுறையினர் சோதனை செய்து அனுமதி வழங்குவர். கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மற்றும் அருட்சகோதரிகள் செல்ல உள்ளதாக வேர்கோடு பங்குதந்தை எல்.சகாயராஜ் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் கச்சத்தீவு செல்ல உள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களின் கச்சத்தீவு வருகை மிக குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.