மாயமான விமானத்தில் நீடிக்கும் மர்மம் : பயணி ஒருவரின் கைப்பேசி இன்னும் பயன்பாட்டில்!!

599

Flight

மலேசிய விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், பயணி ஒருவரின் கைத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற விமானம் காணாமல் போனது, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக மூன்று நாட்களாக தேடியும் விமானத்தை கண்டுபிடிக்கப்படவில்லை.

தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், விபத்தில் சிக்கி அனைவரும் உயிரிழந்தார்களா அல்லது விமானம் கடத்தப்பட்டதா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே வியட்நாம் அருகே உள்ள தோ சூ தீவுக்கு தென்மேற்கு பகுதியில் விமானத்தின் வால் பகுதி மற்றும் கதவு பகுதிகள் உடைந்து கிடந்ததை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அது காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீனப் பயணியின் கைத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அவரது நம்பரை தொடர்பு கொண்டபோது மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்தனர்.

எனவே கைப்பேசி சிக்னலை பயன்படுத்தி விமானத்தை கண்டுபிடிக்குமாறு பயணியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.