5 வருட போராட்டம்.. தாயாரை கண்டுபிடித்த மாற்றுத்திறனாளி பெண் : நெஞ்சை நெகிழ்ச்சி செய்த சம்பவம்!!

1163

மாற்றுத்திறனாளி பெண்..

சிறுவயதில் பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்ற மாற்றுத்திறனாளி பெண் கீதா 5 வருட தேடலுக்கு பின் மராட்டியத்தில் தாயை கண்டுபிடித்து விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவை சோந்த வாய் பேச முடியாத, காது கேளாத 30 வயதாகும் கீதா கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வழி தவறி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார்.

9 வயது சிறுமியாக லாகூர் ரெயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியாக தவித்து நின்ற அவரை, அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்து வளர்த்தது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்திருந்தார்.

இதனிடையே, அவர் கடந்த 5 ஆண்டுகளாக பெற்றோரை தேடிவந்தார். இதற்காக அவர் உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று இருந்தார்.

இதேபோல பலர் கீதாவை தங்களது குடும்பத்தை சேர்ந்தவர் என உரிமை கோரினர். ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் மனம் தளராமல் கீதா தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் பெற்றோரை தேடிவந்தார்.

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பெற்றோரை தேடி மராட்டிய மாநிலம் பர்பானிக்கு வந்தார். அப்போது பர்பானி மாவட்டம் ஜின்துரை சேர்ந்த மீனா வாக்மாரே என்ற மூதாட்டி கீதாவை தனது மகள் என உரிமை கோரினார்.

மேலும் அவர் கீதாவை முதல் முறையாக பார்த்த போது ஆனந்த கண்ணீர் வடித்தார். மூதாட்டி கீதாவின் பெயர் ராதா எனவும் தெரிவித்தார். கீதாவின் வயிற்றில் ஒரு தீக்காய தழும்பு இருக்கும் என தன்னார்வ அமைப்பினரிடம் மூதாட்டி கூறியுள்ளார்.

தன்னார்வ அமைப்பினர் சோதனை செய்த போது மூதாட்டி சொல்லியது சரியாக இருந்து உள்ளது. எனவே கீதா அவரது தாயை கண்டுப்பிடித்துவிட்டார் என்றே கூறப்படுகிறது. மீனா வாக்மாரேயை அவர் அடிக்கடி சென்று சந்தித்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.

இருப்பினும் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர் கூறுகையில், மீனா வாக்மாரே தான் கீதாவின் தாய் என்பதை உறுதிப்படுத்த எப்போது டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசு அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இதற்கிடையே கீதா அவரது உண்மையான தாயுடன் இணைந்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிறுவயதில் வழிதவறிய கீதா பர்பானியில் இருந்து சச்காந்த் எக்ஸ்பிரசில் அமிர்தரசுக்கும், பின்னர் அங்கிருந்து டெல்லி- லாகூர் சம்ஜதா ரெயிலில் பாகிஸ்தானுக்கு சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.