காணிக்கையாக சொக்லெட் பெறும் முருகன்!!

713

Murugan

கடவுளின் ஆசியைப் பெறுவதற்காக ஒருவர் பூ, பழம், சந்தனம் போன்றவற்றைக் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஆனால், கேரள மாநிலத்தில் உள்ள தெக்கன் பழனி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சொக்லெட் பார்கள் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட முன்னணி நிறுவனத்தின் சொக்லெட் பார்கள் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறப்பட்டு பூஜைக்குப் பின்னர் அவையே பிரசாதமாகத் திருப்பித் தரப்படுகின்றன.
இந்தக் கடவுளை உள்ளூர் மக்கள் செல்லமாக மன்ச் முருகன் என்றும் அழைக்கின்றனர்.

21 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இந்த கோவில் பல வருடங்களுக்கு முன்பு முருகபக்தர் ஒருவரின் குடும்பக் கோவிலாக இருந்து வந்துள்ளது.

பழனி மலை மீது இருக்கும் முருகனைத் தரிசிக்க அடிக்கடி தமிழ்நாடு வரும் அந்த பக்தரின் கனவில் முருகன் தோன்றியதால் சுப்ரமணியபுரம் என்ற இடத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இவர்களில் யாருக்கும் எப்பொழுதிலிருந்து இங்கு சொக்லெட் காணிக்கை பெறும் முறை ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இங்குள்ள கடவுளின் பெயர் பாலமுருகன் என்பதால் அவருக்கு சொக்லெட் பிடிக்கும் என்று எண்ணி யாராவது இந்தப் பழக்கத்தை ஆரம்பித்திருக்கலாம் என்று கோவில் மேலாளர் டி.ராதாகிருஷ்ணன் கூறுகின்றார்.

ஆரம்ப காலங்களில் சிறுவர்களே காணிக்கையாக சொக்லெட்டுகளை அளித்தனர் என்றும் பின்னாளில் ஜாதி, மத பேதமில்லாமல் அங்கு வரும் பக்தர்கள் அனைவருமே சொக்லெட் பார்களை காணிக்கையாக செலுத்துகின்றனர் என்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

துலாபாரம் போன்ற நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகளிலும் பூ, வெல்லம் போன்றவற்றிற்குப் பதிலாக சொக்லெட்டுகளே அளிக்கப்படுகின்றன. இதனால் இங்கு சிறுவர்களின் கூட்டம் குறிப்பாக தேர்வு சமயங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது என்று அவர்கள் கூறுகின்றனர்.