மாயமான விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணித்தவரின் விபரங்கள் வெளியானது!!

341

PP

மாயமான மலேசிய விமானத்தில், போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த நபரின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

239 பயணிகளுடன் கடந்த 8ம் திகதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென மாயமானது.

இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப் பெறாத நிலையில், 4 பேர் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்தது தெரியவந்தது. எனவே விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த நபர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. 19 வயது ஈரானிய இளைஞரான இந்நபர் ஜேர்மனிக்குள் குடியேற முயன்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

திருடுபோன பயண ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த விமானத்தில் பயணித்திருந்த இரண்டாவது நபர் பற்றிய விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன, ஆனால் விவரம் எதுவும் இன்னும் தெரியவரவில்லை.

இதற்கிடையே விமானம் தேடப்பட்டுவருகின்ற இடத்தின் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் பரப்பில் மட்டுமல்லாது நிலப்பரப்பிலும் மலேசிய அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

நேரில் பார்த்தவர்கள் பேட்டி..

குறித்த விமானத்தின் இறுதி நிமிடங்களை நேரில் பார்த்த சிலர் பேட்டியளித்துள்ளனர்.

மலேசியாவின் கம்பங் கொடாக் பகுதியில் வசிக்கும் அலிஃப் ஃபாத்தி அப்துல் ஹாதி என்பவர் சம்பவத்தன்று அதிகாலை 1.45 மணியளவில் வானத்தில் பெரிய ஒளிப்பிழம்பு தோன்றியதாக தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக விமானத்தின் முகப்பு விளக்குகள் வானத்தில் உள்ள சிறிய நட்சத்திரங்கள் போல் காட்சியளிக்கும். ஆனால், நான் பார்த்த பிரமாண்டமான தீப்பிழம்பு மேகங்களின் பின்னணியில் சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது.

சில வினாடிகளுக்குள் தாய்லாந்து கடல் எல்லை நோக்கி நகர்ந்து சென்று திடீரென்று மறைந்து விட்டது என்று கூறும் இவர், சாதாரணமாக தனது வீட்டின் மேல் உள்ள வான்வழியில் அன்றாடம் பல விமானங்கள் கடந்து செல்வதாகவும், சம்பவத்தன்று பார்த்த விமானம் சராசரி பாதையை விட்டு விலகிச் சென்றதை கவனிக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது வீட்டில் இருந்து தெற்கே சுமார் 100 மைல் தொலைவில் வாழும் மீனவரான ஆஸித் இப்ராகிம் என்பவரும் அப்துல் ஹாதியின் வீடு இருக்கும் திசையை சுட்டிக்காட்டி, தீப்பற்றி எரிந்தபடி பறந்த ஒரு விமானம் தென்னந்தோப்பின் பின்புறமாக மறைந்து போனதாக தெரிவித்துள்ளார்.