நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு பயணிகள் ரயில் : உடல் நசுங்கி பலர் பலி!!

40638

எகிப்தில்..

எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் இறந்துள்ளனர் மற்றும் 66 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ரயில் விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், சோஹாக் மாகாணத்தில் சம்பவம் நடந்த பகுதிக்கு 36 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் பல பயணிகள் இன்னமும் சிக்கியுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பலர் சுய நினைவின்றி உள்ளதாகவும், பலர் ரத்த காயங்களுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எகிப்தின் ரயில்வே அமைப்பு பொதுவாக மோசமாகவே நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு காலாகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

2016 ல், கெய்ரோ அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர். 2017ல் பயணிகள் ரயில் இரண்டு விபத்துக்குள்ளானதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

2017ல் மட்டும், எகிப்தில் மொத்தம் 1,793 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, எகிப்திய ரயில் நிர்வாகத்தை மொத்தமாக சீரமைக்க 14.1 பில்லியன் டொலர் தொகை தேவை எனவும், ஆனால் தற்போதைய சூழலில் அந்த தொகை தங்களிடம் இல்லை என எகிப்திய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2002 ல், கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதே எகிப்தின் மிக மோசமான ரயில் விபத்து என கருதப்படுகிறது.