மருத்துவமனையில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்தே காணப்படுவதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் சகல வழிகளிலும் அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக கூறிய ஜேக்கப் ஜூமா, மேலதிக மருத்துவத் தகவல்களை வழங்க மறுத்துவிட்டார்.
மண்டேலாவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று ஞாயிறு இரவு அறிவித்தனர்.
94 வயதான மண்டேலா, கடந்த 16 நாட்களாக ப்ரிட்டோரியா நகரின் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நுரையீரலில் மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாக, ஞாயிறன்று மாலை அவரை மருத்துவமனையில் அதிபர் ஜேக்கப் ஜுமா சந்தித்தபோது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகே மண்டேலாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்கிற அறிக்கை வெளியானது.
மருத்துவமனைக்கு சென்ற அதிபர் ஜூமா அங்கு மண்டேலா அவர்களின் மனைவி க்ரேஷா மஷேலை சந்தித்து பேசியுள்ளார்.
மண்டேலா அவர்களின் உடல்நிலை மோசமாகியுள்ள நிலையில் தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, தமது தேசத்தில் உள்ளவர்களையும் உலக மக்களையும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு மீண்டும் வேண்டியுள்ளார்.