ஆஞ்சநேயர் தலையில் வடியும் நெய் : மதுரையில் பரபரப்பு!!(படங்கள்)

402

மதுரை ஆஞ்சநேயர் சிலையின் தலையிலிருந்து நெய் வடிவதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை, கிருஷ்ணாபுரம் கொலனிக்குச் செல்லும் வழியில் உள்ள பாரதிநகர் என்ற இடத்தில் மங்கள விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் சுமார் ஒன்றை அடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. கோவிலின் உள்ளே சிறிய உட்கட்டிடத்தில் இந்த கல் சிலை உள்ளது.

இச்சிலையின் தலையின் மேல் கடந்த 21 நாட்களுக்கு மேல் கட்டியான நெய் உருவாகிறது என்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பலரும் வந்து என்ன இது ஆச்சரியம் என்று பார்த்து சென்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று நடப்பது என்ன என்பதை நேரில் பார்த்து அறிந்து அதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை மாவட்ட கிளை சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், அங்கு வழிபாட்டில் இருந்த அனைத்துத் தரப்பினரும் இது கடவுளின் அற்புதம் என நம்புகின்றனர்.

இவர்கள் அனைவரும் மத்தியதர வர்க்கத்தினர் எனபது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் முதல் வங்கி மேனேஜர் வரை இதில் அடங்குவர்.

இந்நிலையில், சிலையின் அருகில் சென்று பார்த்த போது ஆஞ்சநேயர் தலையில் சிறிய அளவில் கட்டியான நெய் இருந்தது. இந்த நெய் காலை எட்டுமணியளவில் சில அபிஷேகங்கள் செய்த பின்னர் உருவாகிறது என்றும் அது பின்னர் உடல் முழுவதும் பரவுகிறது என்று அதன் கோவில் அர்ச்சகர் கூறினார்.

எட்டரை மணிக்குப்பிறகு அச்சிலை பூட்டப்பட்டு அடுத்த நாள் திறக்கப்படுகிறது. சிலையின் அருகில் சென்று பார்த்த பொழுது நெய்யின் ஒரு பகுதியில் கைரேகை இருப்பது தெரியவந்தது.

எனவே அர்ச்சகர் அபிஷேகங்கள் செய்யும் போது கட்டி நெய்யைத் தடவி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதில் கைரேகை இருப்பது ஓர் ஆதாரமாகும்.

சிலை இருப்பிடம் மிகச் சிறியதாக இருப்பதால் அர்ச்சகர் அபிஷேகம் செய்யும் பொழுது சிலை முழுவதும் அவரது உடலால் மறைக்கப்படுவதால் அவர் என்ன செய்கிறார் எனபது முன்னால் இருக்கும் யாருக்கும் தெரியாது.

மேலும் கடந்த பலவருடங்களாக புகைப்பட எடுக்கப்பட்டு வந்த இந்த சிலையை தற்பொழுது புகைப்படம் எடுக்கக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதற்கான போர்டும் தற்போது தொங்கவிடப்பட்டுள்ளது. இது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

மேலும் அறிவியல் ரீதியாக பார்த்தோமானல் எந்தப்பொருளும் காற்றில் இருந்தோ வெற்றிடத்தில் இருந்தோ வரமுடியாது. எனவே கட்டியான நெய், நெய்யில் இருந்து தான் வந்திருக்க வேண்டும். இதில் எந்தவிதமான அற்புதமும் கிடையாது என்றும் நெய்யை அர்ச்சகரே தடவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் கூறுகையில், இந்தக்கோவிலின் அர்ச்சகர் இக்கோவிலைப் பிரபலப்படுத்த செய்யும் தந்திரம் என்று கூறியுள்ளார்.

M1 M2 M3