மலேசிய விமானத்தின் தொடர்பு திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது : மலேசிய பிரதமர்!!

361

Malaysia

239 பயணிகளுடன் மாயமான விமானத்தின் தொடர்பு திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார்.

239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி சென்ற விமானம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாயமானது. இன்னமும் அந்த விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி தெரியவில்லை.

அந்த விமானத்தை தேடும் பணியில் பல நாடுகள் கடந்த ஒருவார காலமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மாயமான விமான நிலைமை குறித்து கோலாலம்பூரில் அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

பயணிகளுடன் மாயமான விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி கடத்தப்பட்டது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் விமானத்தில் இருந்த தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த ஒருவரால்தான் இது செயலிழக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தின் கடைசி பயண பதிவு தென்சீனக் கடல்பிராந்தியத்தில் இருந்தது.

இதனால் தென்சீனக் கடல் பரப்பில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கஜகஸ்தான் முதல் துர்க்மேனிஸ்தான் வரையிலும் இந்தோனேசியா முதல் தென்னிந்தியா வரையிலுமான பகுதிகளில் அடுத்த கட்ட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த தேடுதல் நடவடிக்கையில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. மாயமான விமானத்தை தேடும் நடவடிக்கைக்கு உதவி வரும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மாயமான விமானத்தில் பயணித்த குடும்பங்களின் உணர்வுகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எங்களது கடமையை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்தார்.