விம்பிள்டன் : ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி..!

401

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சியுறும் வகையில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்தார்.

பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்ஸி அவரை 7-6, 7-6, 6-4 எனும் நேர் செட்களில் வெற்றி கொண்டார்.

எட்டு முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளை வென்று சாதனை படைத்த ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளது பெருத்த ஏமாற்றத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

உலக ஆடவர் டென்னிஸ் தரப்பட்டியலில் ரஃபேல் நடால் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஆனால் அவரை வெற்றி கொண்ட ஸ்டீவ் டார்ஸி 135 ஆவது இடத்தில் உள்ளார்.

இந்தப் போட்டியில் ரஃபேல் நடாலை வெல்வேன் என்று தான் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை என்று போட்டி முடிந்தவுடன் பிபிசியிடம் பேசிய டார்ஸி தெரிவித்தார்.

தனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த வெற்றி மிகப் பெரியது என்றும், இது இனி வரக்கூடியப் போட்டிகளில் தனக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

முதல் செட்டிலிருந்தே டார்ஸியின் ஆளுமை அதிகமாக இருந்தது. எனினும் 6-6 என்ற நிலையில் ரஃபேல் நடால் முதல் இரு செட்களிலும் வெற்றி பெரும் சூழல் இருந்தும் அவர் அதை நழுவ விட்டார்.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் சுற்றில் நட்சத்திர ஆட்டக்காரர் ஒருவர் தோல்வியடிந்துள்ளது விம்பிள்டன் சரித்திரத்தில் இல்லாத ஒன்று என அரங்கத்தில் இருக்கும் பிபிசியின் டென்னிஸ் செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.

இதனிடையே நடப்பு சாம்பியனான ரோஜர் ஃபெடரர் தமது முதல் சுற்று ஆட்டத்தில் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.