தாழ்வாக பறந்த விமானம், கடலில் மிதக்கும் பயணப் பொதிகள் : மீண்டும் பரபரப்புகளுடன் தொடரும் மர்மம்!!

321

flight

239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றி இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தினந்தோறும் விமானம் குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில் ரேடார் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் விமானத்தை தாழ்வாக ஓட்டிச்சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது, எனவே இந்த கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், ரேடாரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு சுமார் 8 மணிநேரம் விமானம் பறந்துள்ளது. வங்காள விரிகுடாவின் மேற்பகுதியில் பறந்தபோது தான் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ரேடார் பார்வையில் படாமல் 3 நாடுகளின் மேலே பறந்திருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தையும் அதன் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளையும் நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும்.

மலைப்பாங்கான பகுதிகளில் 5000 அடிக்கு கீழ் விமானத்தை தாழ்வாகப் பறக்க செய்து ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

விமானம் எங்காவது தரையிறங்கி அதன் என்ஜின் செயலிழந்து போயிருக்கலாம் அல்லது தரையில் மோதியிருக்கலாம். இதுபோன்ற பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் மலாக்கா ஜலசந்தியில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து மலாக்கா ஜலசந்தியில் ஏதாவது மிதந்து வருகிறதா என்பதை பார்க்க கப்பல் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

அந்த கப்பல் ஜலசந்தியில் பயணப் பைகள் மிதப்பதை கண்டுள்ளது. இதையடுத்து சூயஸ் கால்வாய் நோக்கி சென்ற எல்கா ஏதினா என்ற படகு நிறைய பொருட்கள் மலாக்கா ஜலசந்தியில் மிதப்பதாக இந்தோனேசிய அதிகாரிகளுக்கு வானொலி மூலம் தகவல் கொடுத்தது.

இந்த பொருட்கள் மாயமான விமானத்தில் பயணித்தவர்களுடையதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.