மாயமான விமானத்தை பற்றி எங்களுக்கு தெரியாது : தலிபான்!!

1003

Mis-plane

மாயமான மலேசிய விமானத்தை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ம் திகதி பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது.

பத்து நாட்களாகியும் விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அமெரிக்க உள்பட பல நாடுகள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகள் முறைப்படி நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் பைலட் அல்லது துணை பைலட், அல்லது விமானத்தை நன்கு இயக்க தெரிந்த பயணி யாராவதுதான், தகவல் தொடர்பை திட்டமிட்டு துண்டித்து இருக்க வேண்டும் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால், “ஓல் ரைட், குட் நைட்” என்று துணை பைலட் கடைசியாக பேசியுள்ளார்.

அப்போது அவரிடம் பதற்றமோ, பயமோ இருந்தது போல் எந்த அறிகுறியும் இல்லை. அதன்பிறகுதான் விமானம் மாயமாகி உள்ளது. விமானம் காணாமல் போன வியட்நாம் வான்வெளி பகுதி மற்றும் நேரத்தை வைத்து பார்க்கும் போது, ரேடார்களின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர்களால்தான், தகவல் தொடர்பை துண்டித்து விமானத்தை இயக்கி இருக்க முடியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

விமானத்தில் சென்றவர்களில் 156 பேர் சீனர்கள். சீனாவில் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் அதை மலேசிய அரசும் அமெரிக்காவும் மறுத்துள்ளன. இந்நிலையில், விமானத்தை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தலிபான் தீவிரவாதிகளும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் இயக்க செய்தி தொடர்பாளர் ஜபினுல்லா முஜாஹித் கூறுகையில், ஆப்கனுக்கு வெளியில் விமானம் காணாமல் போயுள்ளது. அதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், விமானத்தை பற்றிய ரேடார் தகவல்கள் ஏதாவது இருந்தால் தந்து உதவும்படி இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், உள்நாட்டு பாதுகாப்பு காரணமாக தகவல்களை பரிமாற பல நாடுகள் தயக்கம் காட்டுவதாக அதிகாரிகள் கூறினர். மேலும், விமானத்தை கடத்தி இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்க முடியாது. ஏனெனில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதனால் எல்லை பகுதிகளிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் அதிநவீன ரேடார்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் கூறினர். அதேபோல், விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் வான் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் எந்த விமானமும் பறக்கவில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். கசகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இதையேதான் கூறியுள்ளனர். இதனால் மர்மம் நீடிக்கிறது.