நான்கு வருடங்களாக இறந்த சிசுக்களை சேகரித்த வைத்தியசாலை!!

529

Babyஇங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் என்ற பகுதியில் வல்சால் மனோர் என்ற ​வைத்தியசாலை செயல்பட்டு வருகின்றது. இங்கு சமீபத்தில் ​வைத்தியசாலையின் செயல்பாடுகள் குறித்த உள்ளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அந்த ​வைத்தியசாலையின் பிணவறை சேமிப்புக் கிடங்கில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவில் பிறந்த சிசுக்களின் மிச்சங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் அப்படியே சேமித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

2010ம் ஆண்டில் பிறந்த 2, 2011 ஆம் ஆண்டில் பிறந்த 2, 2012 ஆம் ஆண்டில் பிறந்த 30 மற்றும் 2013 ஆம் ஆண்டில் பிறந்த 52 சிசுக்கள் என்று மொத்தம் 86 சிசுக்களின் மிச்சங்கள் அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சவக்கிடங்கிற்கு ​வைத்தியசாலை நிர்வாகம் அனுப்ப வேண்டிய சிசுக்களின் தகவல் குறிப்புகள் முறையாக அனுப்பப்படாத காரணத்தினால் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கக் முடியவில்லை என்ற காரணம் அங்கிருந்த ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு பொது மன்னிப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ​வைத்தியசாலை நிர்வாகம் இதற்கான விசாரணையைத் துவக்கியுள்ளது.

குறித்த காலத்தில் வெளியேற்றப்படும் இத்தகைய கழிவுகள் வழக்கத்தைவிட அதிகக் காலம் எடுத்துக் கொண்டதற்கு நிர்வாகப் பிழைகள் காரணமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காக பாதிக்கப்பட்ட தாய்மார்களிடம் இந்த நிர்வாகம் மன்னிப்பு கோருகின்றது.

எஞ்சியுள்ள மிச்சங்களை அகற்றும் நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்று வல்சால் ஹெல்த்கேர் என்எச்எஸ் அறக்கட்டளை அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.