சந்திரிக்காவை சந்திக்க மஹிந்த இணக்கம்..!

403

chandrika-mahida

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் மத ஒற்றுமை தொடர்பில் பேச்சு நடத்த சந்தர்ப்பம் தருமாறு சந்திரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கே ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

முதல் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணங்காத போதும் இரண்டாம் முறை விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கே மஹிந்த இணக்கம் வெளியிட்டுள்ளார்.

முதல் தடவையாக சந்திரிக்கா ஜனாதிபதியின் செயலாளர் மூலமே சந்திக்கும் வாய்ப்புக்கான வேண்டுகோளை விடுத்திருந்தார்.

எனினும் அந்த வேண்டுகோள் கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து சந்திரிக்கா குமாரதுங்க தமது வேண்டுகோளை ஜனாதிபதிக்கு நேரடியாக அனுப்பியிருந்தார்.

தம்மை சட்டவிரோதமாக கண்காணிப்பதை நிறுத்துமாறு சந்திரிகா, மஹிந்தவுக்கு கடிதம்

தமக்கு எதிரான அனைத்து கண்காணிப்புகளையும் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சந்திரிகா குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதியன்று மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமது நடவடிக்கைகள், நடமாட்டங்கள், என்பன கண்காணிக்கப்படுவது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயல்கள் என்று சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல் அத்துடன் தமது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சந்திரிக்கா கூறியுள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே சந்திரிக்காவின் குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.

நீங்களும் உங்களது அரசாங்கமும் எனது நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொண்டு வரும் கண்காணிப்புக்கள் சட்டவிரோதமானவை. அவை எனது அடிப்படை உரிமைகளை மீறும் செயல்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.

தமக்கு எதிரான இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் யாவும் உங்களதும் உங்கள் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவினதும் கீழ் இயங்கும் பிரிவினராலேயே மேற்கொள்ளப்படுவதாக சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது தொலைபேசி, மின்னஞ்சல் உட்பட்ட அனைத்து விடயங்களும் கண்காணிக்கப்படுகின்றன. தமது கொழும்பு மற்றும் ஹொரகொல்ல வீடு என்பனவும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தமது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் மற்றும் ஏனையோர் அரச புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அண்மையில் வெளிநாட்டு விருந்தாளிகளுடன் தாம் அனுரதரத்துக்கு சென்றிருந்த போது தாம் தங்கியிருந்த ஹோட்டல் 24 மணித்தியாலமும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

உங்களது அரசாங்கத்தின் உயரதிகாரிகளால் கொலைகள், காணாமல் போதல் மற்றும் சித்திரவதைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தம்மை தொடர்ந்தும் கண்காணிப்பது தமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ என்று அஞ்சுவதாக சந்திரிக்கா தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.