வவுனியா வடக்கில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்றார் லெனின் அறிவழகன் !

2140


வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தின்  புதிய  வலயக்கல்விப் பணிப்பாளராக திரு துரைராஜசிங்கம்  லெனின் அறிவழகன் இன்று(01.07.2021) வியாழக்கிழமை  உத்தியோகபூர்வமாக  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.வடக்கு மாகாணத்தின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய கல்விப் பணிப்பாளர்கள்  அண்மையில் நியமிக்கபட்டுள்ளனர்.வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வுபெற்றுச் சென்றதாலும் மேலும் சிலர் இடமாற்றம் பெற்றுச் சென்றதாலும் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையில் கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன .

இதனடிப்படையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி.அன்னமலர் சுரேந்திரன் வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தற்போது வவுனியா தெற்கு வலயக் அலுவலகத்தில்  கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிகல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் திரு.துரைராஜசிங்கம் லெனின் அறிவழகன் நியமிக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது .யாழ் இந்துக் கல்லூரி, வவுனியா தமிழ்மத்திய கல்லூரி  என்பவற்றின்  பழைய மாணவரான லெனின் அறிவழகன் வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் வடமாகாணத்தின் 13 வருட உத்தரவாதமளிக்கபட்ட கல்வி வேலைத்திட்டத்தின் இணைப்பாளராகவும் வடக்கு மாகாணத்தில் ஊடக கற்கைகள் பாடத்தின் இணைப்பாளராகவும் கடமையாற்றியவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.