கடத்திச் சென்று கடலில் மூழ்கடித்தாரா? மாயமான மலேசிய விமான விமானியின் திகில் பின்னணி!!

327

Flight

மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை.

இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19ம் திகதி அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் கிடைத்தபடி இருக்கின்றன!

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு கடந்த மார்ச் 8ம் திகதி அதிகாலை நேரத்தில் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம். சீனக் கடலுக்கு மேலே வியட்நாம் அருகே உள்ள ஒரு தீவுக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென மாயமானது.

இந்த விமானத்தில் 239 பேர் இருந்தனர். இவர்களில் 153 பேர் சீனர்கள். ஐந்து பேர் இந்தியர்கள். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். விமானத்தைத் தேடும் பணியில் சீனா அதிக தீவிரம்காட்டுகிறது.

இந் நிலையில் மாயமான விமானத்தின் தலைமை விமானி ஜகாரி அகமது ஷாவின் மர்மப் பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அவருடைய வயது 53. விமானப் பணியில் 30 வருட அனுபவம் கொண்டவர் அவர்.

ஐ.நா. கண்காணிப்பு அமைப்பினர்.. அணுகுண்டு வெடிப்பு மற்றும் பூகம்பங்களைக் கண்டறியும் வகையில் அதி நவீன தொழில்நுட்பக் கண்காணிப்புக் கருவிகளை உலகெங்கும் பல்வேறு இடங்களில் நிறுவியுள்ளோம். அதை வைத்துப் பார்க்கும்போது, மலேசிய விமானம் நடுவானில் எங்கும் வெடித்துச் சிதறவில்லை. தரையில் எங்கும் விழுந்து நொறுங்கவில்லை. கடலில் எங்கும் மோதியதாகவே தெரியவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சொன்னார்கள். அப்படியானால், விமானம் என்ன ஆகியிருக்கும் என்கிற சஸ்பென்ஸ் இன்னும் கூடியிருக்கிறது. ஒட்டுமொத்த விசாரணை அமைப்புகளின் பார்வை விமானி அகமது ஷா மீது திரும்பியிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியன் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு கவுன்சிலின் அட்வைஸராக இருக்கும் அ.ரெங்கநாதன் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையில், இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக இருந்தவர். மலேசியன் விமானம் மாயமாக மறைந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார்..

என்னுடைய 40 வருட அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், 1997ம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அதன் விமானி திடீரென்று விபரீதமான காரியத்தைச் செய்தார். மிக உயரத்துக்கு விமானத்தை ஓட்டிச் சென்றவர், வழியில் இந்தோனேஷியா நாட்டில் ஓடும் நதி ஒன்றை நோக்கி விமானத்தைச் செலுத்தி, விபத்தை ஏற்படுத்தினார். அந்தக் கோரச் சம்பவத்தில் 104 பயணிகள் இறந்தனர்.

அதாவது, விமானி தானும் தற்கொலை முடிவை எடுத்து, மற்ற பயணிகளையும் கொலைசெய்யக் காரணமாக இருந்தார். அதே பாணியில்தான் இந்த மலேசிய நாட்டு விமான மர்மச் சம்பவம் அரங்கேறி இருக்குமோ என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

மலேசிய விமானத்தை ஓட்டிய விமானியின் வீட்டில் ‘சிமுலேட்டர் என்கிற கருவி சிக்கியுள்ளது. அதை பரிசோதித்தபோது, தென்னிந்திய, மாலத்தீவின் விமான நிலையம் போன்ற சிறிய விமான தளங்களில் பெரிய விமானத்தை எப்படி இறக்குவது என்பது பற்றிய நிகழ்சிகளை வைத்திருந்தாராம். இந்தக் கோணத்தில் அவர் ஏன் ரகசிய பயிற்சி எடுத்தார் என்று விசாரணை அதிகாரிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். விமானிக்கும் அந்த விமான நிலையங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

அன்றைய தினம் விமானத்தை 45 ஆயிரம் அடி உயரத்துக்குத் திடீரென கொண்டுசென்றிருக்கிறார். அப்போது, விமானத்தின் உள்ளே பயணிகள் இருக்கும் கேபினின் பிரஷர் தொடர்பான முக்கியக் கருவிகளின் செயல்பாட்டை திடீரென விமானி நிறுத்தியிருக்கக் கூடும். அப்படி செய்தால், விமானத்தின் உட்பக்கம் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஒன்பது விநாடிகளில் செயற்கை ஒக்சிஜனை பயணிகள் சுவாசிக்கவில்லை என்றால், மூளைச்சாவு நிச்சயம்.

அதிகாலை நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சுதாரிப்பதற்குள் மரணத்தைத் தழுவியிருக்கலாம். இந்த நேரத்தில், விமானி உஷாராக செயற்கை சுவாசக் கருவிகளை அணிந்திருப்பார் என்பதால் அவருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

அடுத்து மலேசியாவை தாண்டி வியட்நாம் பக்கம் பறந்திருக்க வேண்டும். அங்கிருந்து வடக்குப் பக்கம் போயிருந்தால், பாகிஸ்தான், சீன நாடுகளின் கண்கொத்தி ரேடார் கண்காணிப்பில் எப்படியும் சிக்கியிருக்கும். அப்படி போகாமல், தெற்குப் பக்கமாக விமானத்தை சாதுர்யமாக ஓட்டியிருக்கக் கூடும். அதாவது, இந்திய எல்லையில் வரும் அந்தமான், நிகோபார் தீவுகள் திசைநோக்கி விமானம் பறந்ததற்கான ரேடார் குறிப்புகள் கிடைத்துள்ளன.

இரவு நேரத்தில் அந்தமான், நிகோபார் தீவுகளில் ரேடார் செயல்பாட்டை ஏனோ நிறுத்திவைக்கிறார்கள். அதனால், விமானம் சென்றது பற்றிய துல்லியத் தகவல்கள் அங்கே பதிவாக வாய்ப்பு இல்லை. அது சென்ற திசை பற்றித்தான் தெரியும். இதைவைத்து கணக்குப்போட்டால், இந்தியப் பெருங்கடல் மீது மலேசிய விமானம் பறந்திருக்க வேண்டும். அதன் பிறகு, வேறு எங்கும் சென்றதற்கான சுவடுகூட தெரியவில்லை.

இந்தியப் பெருங்கடல் மிகவும் ஆழமானது. 10,000 அடி ஆழத்தில் விமானம் சொருகியிருந்தால், அதை உடனடியாகக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். தற்போது அவுஸ்திரேலிய நாட்டு பிரதமரும் இதே கோணத்தில் கருத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்!

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மலேசிய விமானி ஏன் திசை மாறி விமானத்தை ஓட்டினார், விமானத்தின் பிரஸர் கருவிகளை ஏன் நிறுத்தினார், அதற்கு என்ன நோக்கம்… என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளன. ஒருவேளை, ஹைஜாக்கர்கள் மூலம் விமானிக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா அல்லது, அவர்கள் விமானியை மிரட்டி இதுபோன்ற விபரீதத்தை அரங்கேற்றினார்களா, இந்தக் கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் ரெங்கநாதன்.

இதற்கிடையில் தலைமை விமானி ஜகாரி அகமது ஷா, மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு ஒரு வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாம். அந்தத் தீர்ப்பு வழக்கப்பட்ட நாளில்தான் விமானம் மாயமானது. தீர்ப்பு வழங்கப்பட்ட நீதிமன்றத்துக்கு அன்வர் இப்ராகிம் போயிருக்கிறார்.

அவருடன் விமானி அகமது ஷாவும் போயிருக்கிறார். தீர்ப்பை கேள்விப்பட்டு, புலம்பிக்கொண்டிருந்தாராம். பிறகு, விமான நிலையத்துக்குப் பணிக்குப் போனாராம். அதன் பிறகு, அவர் ஓட்டிய விமானம் மாயமானது. தனது தலைவருக்குத் தரப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்த விபரீதத்தை அமகது ஷாவே அரங்கேற்றியிருப்பாரா என்றும் மலேசிய பிரமுகர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றார்கள்.