மாயமான விமானம் சம்பந்தமான புதிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா!!(வீடியோ)

334

Missing plane

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது. இதுநாள் வரையில் விமானம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில், விமானத்தில் உடைந்த பாகங்கள் மிதப்பது போன்ற செயற்கைகோள் படங்களை அவுஸ்திரேலியா வெளியிட்டது.

இதுகுறித்து அவுஸ்திரேலியாவின் துணை பிரதமர் வாரன் டிரஸ் கூறுகையில், கடந்த 16ம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தை ஆதாரமாக வைத்தே தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமையுடன் 6 நாள்களாகி விட்டதால் செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரிந்த 2 துண்டுகளும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். சம்பவ கடல் பகுதியில் ரேடியோ அதிர்வலைகளை வெளியிடும் மிதவைகளும் போர் விமானத்தில் இருந்து வீசப்பட்டுள்ளன.

அதன்மூலம் கடலுக்கு அடியில் ஏதாவது பொருள்கள் மூழ்கியிருந்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று அவுஸ்திரேலிய விமானப் படை மூத்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தின் பாகங்கள் மிதப்பது போன்ற படங்களை சீன செயற்கைக்கோள் அனுப்பியுள்ளதாகவும், அது தொடர்பான தகவலை சீனா பகிர்ந்துள்ளதாகவும் மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த இடத்துக்கு தங்கள் கப்பலை அனுப்பி, விரிவான ஆய்வு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த மிதக்கும் பொருள் 22 மீட்டர் நீளம் மற்றும் 30 மீட்டர் அகலம் கொண்டிருக்கிறது என்றும், மாயமான மலேசியா விமானத்தின் பாகங்களாக இருப்பதற்கான சாத்தியம் உண்டு எனவும் நம்பப்படுகிறது.

இதற்கிடையே கடுமையான நீரோட்டங்கள் கொண்ட அப்பகுதியில் சூறாவளி வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.