13வது திருத்தச் சட்ட மூலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாது உள்ளவாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்ட மூலத்தை ஒரு சூதாட்டமாக அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
ஜூன் மாதம் 12ஆம் திகதி கட்சி தலைவர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே வடக்கு தேர்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவிற்கு சமூகமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த கடிதத்தின் மூலமாக 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் அந்த கடிதத்திற்கு இதுவரையில் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என திஸ்ஸ கூறினார்.
இதேவேளை ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போயுள்ள சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அறிக்கையிடப்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.