வவுனியாவில் 49 பேர் கொரோனா தொற்றால் மரணம் : 3585 பேருக்கு கொரோனா தொற்று!!

1915

கொரோனா..

வவுனியாவில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதுடன், 3585 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் கொரோனா சமகால நிலைமை தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கொரோனா தொற்றுநோய் தொடர்பாக இன்றையதினம் ஆராயப்பட்டது. அந்தவகையில் 28 தரப்பினருக்கு ஊரடங்கு காலப்பகுதியில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்வதற்குச் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5500 பேர் இதுவரை கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களிற்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் படி அதனைப் பெறுவதற்கு 17270 தகுதி பெற்றுள்ளனர்.

அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் குடும்பங்களிற்கு அந்த நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இருதினங்களில் அந்த கொடுப்பனவை வழங்கி முடிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். அந்தநிதியினை எமது உத்தியோகத்தர்கள் மூலம் நேரடியாகவே வீடுகளிற்குச் சென்று வழங்குவார்கள்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3585 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 49 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 30 வயதிற்குட்பட்ட மேற்பட்ட 96 ஆயிரம் பேரில் 82 சதவீதமானவர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அவர்களிற்கான இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான திட்டம் அடுத்த கிழமையிலிருந்து ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எமது மாவட்டத்திற்குத் தேவையான தடுப்பூசிகளின் விபரங்கள் சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது கிடைக்கப்பெற்றதும் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் திட்டம் மாவட்டத்திலே ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் சுகாதாரப்பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர், பிரதேச செயலாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டுள்ளார்.