வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி!!

2357

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சுகாதாரப் பிரிவினரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்க தீர்மானித்து கடந்த யூலை மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட 83 ஆயிரத்து 151 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் தாக்கம் அதிகமாகவுள்ளமையால் அவர்களுக்கு முன்னுரிமையளித்து 5 ஆயிரத்து 800 பேருக்கு நடமாடும் திட்டத்தின் மூலம் இராணுவத்தினர் ஊடாக தற்போது அவர்களுக்குரிய முதலாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனையடுத்து முதலாவது டோஸ் சினோபாம் தடுப்பூசி பெற்றுக் கொண்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் சினோபாம் தடுப்பூசிகளை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தங்கள் கிராம அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய உரிய திகதிகளில், குறிப்பிட்ட இடங்களில் அவற்றை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.