வவுனியாவில் இராணுவத்தினரினால் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை!!

1364

கொரோனா விழிப்புணர்வு..

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வன்னி இராணுவத்தினரினால் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இதனையடுத்து வன்னி இராணுவத்தினரினால் மக்கள் ஒன்று கூடியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக வவுனியா நகர், வங்கிகள், பஜார் வீதி, ஏ9 வீதி, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற பகுதிகளில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு கொரோனா நோயாளி என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் பழகியிருந்தால் தாங்களாகவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.

மற்றவர்களுடன் பழகும் சமயத்தில் குறைந்த பட்சம் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுதல் அவசியமாகும். மேலும் சுகாதார பாதுகாப்பு முகக்கவசம் அணிதல் வேண்டும் . இருமல், தும்மல் வருகின்ற சமயத்தில் முகத்தினை மறைத்தல் அவசியமாகும்.

கொரோனா நோயாளியென ஒருவரை தெரிந்தும் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வன்னி இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.