வவுனியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பழங்கள் : முறைப்பாடு செய்தும் நடவடிக்கை இல்லை!!

1873


பழங்கள்..



பொது முடக்கம் காரணமாக மக்கள் வருமானமிழந்து இருக்கும் நிலையில் வவுனியாவில் பழங்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்ற போதும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா குருமன்காடு, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி என்பவற்றில் நடமாடும் கார் மற்றும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் பழங்கள் அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன.



5 சிறிய மஞ்சள் தோடம்பழம் 300 ரூபாய் வரையிலும், மஞ்சள் பெரிய தோடம்பழம் ஒன்று 150 ருபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதுடன், ஏனைய பழ வகைகளும் அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.



கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தமது உடல் நலத்திற்காக பழங்களை வாங்கி உண்பதுடன், விற்றமின் சீ போன்ற மாத்திரைக்ளுக்கு தட்டுப்பாடு நிலவுவதனால் தோடை போன்ற பழங்களையும் அதிகம் வாங்கி வருகின்றனர்.


இதனை சாதகமாகப்பயன்படுத்தி சில வியாபாரிகள், அனர்த்த நேரத்தில் அதிக விலைக்கு பழங்களை விற்பனை செய்து மக்களது பணத்தை சுரண்டி வருகின்றனர்.

இது தொடர்பில் வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி எஸ்.நிலாந்தன் அவர்களிடம் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்ட போது,


தமக்கு சில இலக்குகள் தரப்பட்டுள்ளன. தற்போது அவற்றை செய்து வருகின்றோம். இதனை எம்மால் உடனடியாக பார்க்க முடியாது. பின்னர் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.